Thursday, 27 March 2014

சைவத்தமிழ் பேராசான் சுவாமி விபுலாநந்தர் பிறந்த நாள் 27.03.2014
கிழக்கு இலங்கையில், வாழையடி வாழையென வந்த பழங்குடி மரபில், காரை தீவின் காரேறு மூதூர், இசைத்தமிழ்ப் பேராசான் சுவாமி விபுலாநந்தரைப் பெற்றெடுத்த பெருமை பெற்றது. சாமித்தம்பியார் வேளாளர் குடியில் விளங்கு புகழ் பெற்ற நல்ல மனிதராய்க் கண்ணம்மை எனும் வாழ்க்கைத் துணையுடன் நடத்திய குடும்ப வாழ்வில், அக்குலம் சிறக்க விபுலாநந்தர் தோன்றினார். ஆண்டு 1892 - அந்த ஆண்டிலே தான் சிலப்பதிகாரத்தை, உ.வே.சா.வின் உயரிய உழைப்பால், தமிழ்ச் சமுதாயம் முழுமையாகக் கண்டு களித்தது. பின்னொரு காலத்தில், சிலம்பின் இசைத்தமிழ் நுட்பத்தை எடுத்தியம்பவுள்ள பெருமகனையும் அதே ஆண்டு பிறப்பித்துச் சிறந்தது.

சாமித் தம்பியார் தம் புதல்வனுக்கு 'மயில்வாகனன்' எனும் பெயர் சூட்டி மகிழ்ந்தார். பள்ளிப் பருவம் அடைந்ததும் மயில்வாகனன், குஞ்சித் தம்பி எனும் ஆசானிடம் பாடங் கேட்டதோடு, தந்தையாரிடமும் தாய் மாமன் வசந்தரா பிள்ளையிடமும் கற்கும் வாய்ப்புப் பெற்றான். காரை தீவின் பிள்ளையார் கோயிலில் பட்டகையராப் பணியாற்றி வந்த வைத்தியலிங்க தேசிகர், தமிழ் மொழியுடன் வடமொழியறிவும் பெற்று விளங்கியதை அறிந்த சாமித் தம்பியார், மயில்வாகனன் அப்பெருந்தகையிடம் பயில்வதற்கு அனுப்பினார். தமிழ் இலக்கிய இலக்கணங்களை, தேசிகரிடம் தெளிவுறக் கற்ற மயில்வாகனன், செய்யுள் இயற்றும் திறத்தைத் தம் பன்னிரண்டாம் வயதிலேயே பெற்றிருந்தான்.
அக்காலத்தில் சென் மைக்கல் கல்லூரியில் அதிபராக இருந்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வண பொனெல் என்பவராவர். இவர் கணித பாடத்தைப் போதிப்பதில் ஆற்றல் மிகுந்தவர். மயில்வாகனனாரின் கணித திறமைக்கு வித்திட்டவர் இக் குருவானவர். இக்கல்லூரியில் இருந்து பதினாறாவது வயதில் கேம்ப்றிட்ஜ் சீனியர் பரீட்சையில் முதன்மையாகத் தேறினார். தாம் கற்ற கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. பின்னர் கல்முனை மெதடிஸ்த பாடசாலையிலும் ஆசிரியராக இருந்தார். பின்னர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இரண்டாண்டு காலம் பயிற்சி பெறுவதற்காக 1911ஆம் ஆண்டு கொழும்பு வந்தார். 1912ஆம் ஆண்டு ப்யிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டாண்டுகள் பணி புரிந்தார்.
மொழித்துறையிலும் இலக்கியத்துறையிலும் மட்டுமன்றி விஞ்ஞானத் துறையிலும் தனது திறமையை வெளிக்காட்ட மயில்வாகனனார் பின்னிற்கவில்லை. 1915ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் பொறியியற் கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916 ஆம் ஆண்டு விஞ்ஞானத்தில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார்.
மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதத் தேர்வில் இலங்கையிலேயே முதன் முதலில் பங்கு பற்றி, முதன்மைத் தகுதி பெற்றார்.

இயல்பாகவே இறை நாட்டம் கொண்டிருந்த மயில்வாகனன் 'ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன்', சமயத்திற்காக ஆற்றி வரும் பணிகளை அறிந்து, தம்மையும் அந்த அமைப்புடன் ஈடுபடுத்திக் கொள்ளலாமென எண்ணியிருந்த வேளையில், இலங்கைக்கு சுவாமி சர்வானந்தர் வருகை புரிந்தார். சர்வானந்தரின் தொடர்பு மயில்வாகனனின் உள்ளத்துள் 'திறவுத் தூய்மை' எனும் திருவிளக்கை ஏற்றி வைத்தது.

ஆங்கிலப் பள்ளியில் விஞ்ஞான அறிவு பெற்றிருந்த மயில்வாகனன் 1920-ஆம் ஆண்டு மானிப்பாய் இந்துக் கல்லூரியின் தலைமை ஆசிரியரானார். மனத்தை ஈர்ந்து வந்த துறவுணர்வு, நாளும் பொழுதும் பெருகி, ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனில் சங்கமிக்கத் துடித்துக் கொண்டிருந்தார். ஆசிரியப் பதவியைத் துறந்து 1922 ஆம் ஆண்டில் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனில் இணைந்து சென்னைக்குப் புறப்பட்டார், மயில்வாகனன்.

'பிரபோத சைதன்யா' எனும் தீட்ஷா நாமத்தைப் பெற்று, 1924 ஆம் ஆண்டு சுவாமி சிவானந்தர் ஞான உபதேசம் அருள 'சுவாமி விபுலாநந்தர்' என்ற திருப் பெயர் பெற்றார் மயில்வாகனன். தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் திறமும் உரமும் பெற்றிருந்த சுவாமி விபுலாநந்தர் 'ஸ்ரீ இராமகிருஷ்ண விஜயம்' எனும் தமிழ் இதழுக்கும், 'வேதாந்த கேசரி' எனும் ஆங்கிலத் திங்கள் வெளியீட்டிற்கும் ஆசிரியர் ஆனார். சுவாமிகளின் பேரறிவுத் திறத்தையும், பெருங்கருணை இயல்பினையும் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது.
இலங்கையில் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் நடத்தி வந்த பள்ளிகளை எல்லாம் சீரோடும் சிறப்போடும் நிர்வகித்து வந்த விபுலாநந்தர், மட்டக்களப்பில் ஆங்கில அறிவியல் கல்வியைப் போதிக்க 1929-ம் ஆண்டில் சிவானந்த வித்தியாலயத்தை நிறுவினார். யாழ்ப்பாணம் 'ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கம் என்றோர் அமைப்பைத் தொடங்கி வைத்து, பிரவேஷாசப் பண்டிதத் தேர்வு, பால பண்டிதத் தேர்வு, பண்டிதத் தேர்வு ஆகிய தேர்வு முறைகளை ஏற்படுத்தி, தமிழ் மொழி வளர்ச்சிக்கு, தக்க நெறிகளை வகுத்தளித்தார்.
செட்டி நாட்டாரசர் வேண்டுகோளின் படி, சுவாமி விபுலாநந்தர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1931 ஆம் ஆண்டு தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்து போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார்.

தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றுடன் இலத்தீன், யவனம், வங்கம், சிங்களம், அரபி முதலாய பன் மொழிப் புலமை பெற்றிருந்த சுவாமி விபுலாநந்தர், 'ஆங்கிலவாணி', 'விவேகானந்த ஞானதீபம்', 'கர்மயோகம்', 'ஞானயோகம்' முதலிய பல மொழி பெயர்ப்பு நூல்களை ஸ்ரீ இராமகிருஷ்ண மடாலயத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் முப்பதுகளிலும், நாற்பதுகளிலும் நடைபெற்ற தேசிய தெய்வீக மொழியுணர்வு தழைத்துச் செழிக்கத் தம் உரையாற்றலை உரமாக்கினார் சுவாமிகள்.
'பிரபுத்த பாரத' எனும் இதழிற்கு ஆசிரியரான சுவாமிகள், இமயமலைச் சாரலில் உள்ள மாயாவதி ஆசிரமத்தில் தங்கினார். அப்போது தான், இசைத் தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப் பெற்று, அரிய நூலாகிய 'யாழ் நூல்' உருவாக்கம் பெற்றது.
யாழ்நூல் அரங்கேற்றத்திற்குப் பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பிய சுவாமிகள், கொழும்பில் மருத்துவ விடுதி ஒன்றில் தங்கி சிகிச்சை பெறலானார். 1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ம் நாள் (19/07/1947) சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் அமரத்துவம் அடைந்தார். சுவாமி அவர்களின் பூதவுடல் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. சுவாமி அவர்கள் ஆற்றிய தமிழ்ப் பணியும், அவர் உருவாக்கிய தாபனங்களும் காலத்தால் மறையாது. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் இருக்கும் வரை முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் திருநாமமும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

எழுதியவர்: குன்றக்குடி பெரியபெருமாள்


No comments:

Post a Comment