QS என்னும் மந்திரச் சொல் - உயர் கல்வியின் உரைகல்
முனைவர்.செ.திருமாறன்
கடந்த மாதத்தில் இந்தியா
முழுவதும் உள்ள பத்திரிக்கைகளில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு சொல் QS என்று அழைக்கப்படும் Quacquarelli
Symonds என்ற நிறுவனம்.இதன் பணியானது உலகில் உள்ள கல்வி நிறுவனங்களைத் தரநிர்ணயம்
செய்து, அவற்றை வகைப்படுத்துதலே
ஆகும். இந்த நிறுவனமானது
கடந்த 10.09.2013 இல் உலகில்
உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்தியாவில்
உள்ள எந்த ஒரு பல்கலைக்கழகமோ அல்லது இந்தியத்தொழில் நுட்பக் கல்லூரிகளோ இடம்பெறவில்லை
என்பதுதான் இதில் வருத்தமான செய்தி.
இத்தருணத்தில் இந்தியாவின்
பண்டைய கல்வி முறை, தற்போதைய நிலை, தரவரிசைப் பட்டியல்
தயாரிக்கும் முறை, நம்பகத்தன்மை, இந்தியக் கல்வி நிறுவனங்கள்
இடம்பெறாமைக்கு வைக்கப்படும் காரணங்கள், எதிர்காலத்தில் இடம்பெற
ஆலோசனைகள் இவைகளே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
உலகத்துக்கே அறிவொளி
வழங்கிய முதல்நாடு இந்தியா என்பதற்கு ஒரே ஆதாரம் நாளந்தா பல்கலைக்கழகம்.
நளந்தா என்றால், "குறைவற்றகொடை' என்று அர்த்தம். கிறிஸ்து பிறப்பதற்கு பலநூற்றாண்டுகள்
முன்பே செம்மையாக இயங்கி வந்த இந்தப் பல்கலை, உலக வரலாற்றின் முதல் பல்கலைக்கழங்களில்
ஒன்று. ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களோடு
ஒப்பிடும்போது 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும், ஐரோப்பாவின் பழமை வாய்ந்த பலோக்னா பல்கலைக்கழகத்தோடு ஒப்பிடும்போது
600 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்கலைக்கழகமாகவும் நாளந்தா விளங்குகிறது.
மொத்தம் 10 ஆயிரம் பேர் படித்த இந்த பல்கலைக்கழகத்தில், 2,000 பேராசிரியர்கள்
பணிபுரிந்துள்ளனர். 11 தங்கும் விடுதிகள் இருந்துள்ளன. "தர்மத்தின்
புதையல்' என்ற பெயரில் பெரிய நூலகம் இயங்கியிருக்கிறது. பல்கலைக்கழகத்தில் புத்தமத, இந்துமத புனித நூல்கள்,
பகுத்தறிவு பாடங்கள், வெளிநாட்டு, உள்நாட்டு படிப்புகள் சொல்லித்தரப்பட்டன. அறிவியல்,
வானியல், மருத்துவம் மற்றும் தத்துவவியல்,
தர்க்கவியல், மனோதத்துவவியல், சாங்க்யம், யோகசாஸ்திரம், வேதங்களும்
பாடத்திட்டத்தில் இருந்திருக்கின்றது. ஆதிகால இந்தியர்கள் கல்வியை
அறிவுவளர்ச்சிக்கான கருவியாகவே கருதி வந்துள்ளனர். கற்ற கல்வியை பொருளீட்டலுக்குப்
பயன்படுத்தியதில்லை என அறிகிறோம்.
இந்திய
சுதந்திரத்திற்கு முன்பாக, இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய கால
கட்டங்களில் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியில் சிறிது கவனம்
செலுத்தியது. சர்.ஆர்டசீர் தலால் என்ற
ஆங்கிலேயக் கவர்னரின் செயல் பிரதிநிதி இந்தியாவின் எதிர்காலம் தொழில் நுட்ப
வளர்ச்சியிலே உள்ளது என்றுக் கருதினார். இதனைச் செயல் வடிவம்
கொடுக்கப் பாடுபட்டவர்கள் டாக்டர்.ஹுமாயூன் கபீர், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் டாக்டர். பி.சி. ராய், சர். ஜோகிந்தர் சிங், மற்றும் சர். நளினி
ரஞ்சன் சர்க்கார் ஆகியோர். சர்க்கார் குழு அரசுக்கு அளித்த
அறிக்கையில் அமெரிக்காவில் உள்ள மாசாசூட்ஷ் நிறுவனம்(Massa chutes) போன்று இந்தியாவில் 4 இடங்களில் தொழில் நுட்பக்
கழகங்கள் அமைக்கவேண்டும் என பரிந்துரைத்தது. என்ன ஆச்சர்யம்
அதே MIT நிறுவனம் தான் இன்று க்யூ.எஸ் தரவரிசைப்
பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் அதேபோன்று
வரவேண்டும் என ஆரம்பிக்கப்பட்ட இந்தியத் தொழில் நுட்பக் கழகங்களோ படுபாதாளத்தில்.
நவீன இந்தியாவின்
சிற்பி என்று வர்ணிக்கப்பட்ட பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் தொழில் நுட்பப்
பல்கலைக் கழகங்கள் விஞ்ஞானிகளையும், தொழில் நுட்ப வல்லுநர்களையும் உருவாக்கும்,
அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலும்
பங்கெடுப்பதன் மூலம் நம் நாடு சுயசார்புக் கொள்கையில் பிறழாமல் இருக்கும் என்று
நம்பினார். அதே நம்பிக்கைதான் 1951-ல்
இந்தியத் தொழில் நுல்பக் கழகம், காரக்பூரில் தொடங்கி மும்பை,
சென்னை, கான்பூர், டெல்லி
ஆகிய இடங்களிலும் பரவி இன்று 13 இடங்களில் செயல்பட்டுக்
வருகின்றது.
இக்கல்வி நிறுவனங்கள்
பொறியியல், தொழில் நுட்பம் மட்டுமல்லாது வணிக மேலாண்மை, தொழில் முனைதல்
போன்றவற்றிலும் கவனம் செலுத்தி வருகின்றன. பல ஆண்டுகளாக இந்தியத் தொழில் நுட்பக்
கழகங்கள் உலகத் தரத்தில் கல்வியை அளிப்பதாகவும், ஆராய்ச்சிகள் மேற்கொண்டு
வருவதாகவும் நம்பப் பட்டு வருகின்றன.
நாடு விடுதலை அடைந்தபின்
உயர்கல்வியில் மிகப்பெறும் மாற்றத்தைக் கண்டிருக்கிறோம். 1950
ஆண்டுகளில் இருந்த பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை 18 முதல் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது 27 பல்கலை என்ற எண்ணிக்கை என்பது இன்று
600ஐ எட்டியுள்ளது. அதே போல 578 கல்லூரிகள் இன்று 30,000 ஆகமாறி உள்ளது. ஆனால் இது மட்டுமே வளர்ச்சியின் அளவுகோல் அல்ல.
க்யூ.எஸ் தரவரிசைப்
பட்டியல்:
கடந்த 2004-2009 வரை டைம்ஸ் உயல் கல்வி என்ற அமைப்புடன் இணைந்து "டைம்ஸ் உயல் கல்வி-க்யூ.எஸ் பல்கலைக்
கழகங்கள் தர பட்டியல்" என்ற பெயரில் வெளியிட்டு வந்தது.
2010 முதல் இரு நிறுவனங்களும் தனித்தனிப் பட்டியலை வெளியிட்டு
வருகின்றன.க்யூ.எஸ் நிறுவனமானது முன்பு
பயன்படுத்தப்பட்ட அதே முறையிலும், "டைம்ஸ் நிறுவனம்"
தாம்ஸ்ன் ராய்ட்டர்ஸ் என்ற புதிய நிறுவனத்துடன் புதிய முறையை
பயன்படுத்தி வருகிறது.
க்யூ.எஸ் நிறுவனம்
கீழ்க்கண்ட பட்டியலில் தரவரிசைப் படுத்துகிறது.
1. உலக அளவில் சிறந்த பல்கலைக் கழகங்கள்.
2. உலக அளவில் சிறந்த கலவி நிறுவனம் (பாடப்
பிரிவு வாரியாக).
3. ஆசிய அளவில் சிறந்த பல்கலைக் கழகங்கள்.
4. லத்தின் அமெரிக்க நாடுகளில் சிறந்த பல்கலைக்
கழகங்கள்.
5. மாணவர்களின் கல்விக்கு உளக அளவில் சிறந்த
நகரங்கள்
6. 50 க்குள் 50
வகைப்பாட்டியல் முறை:
1. கல்வியாளர்களின் மதிப்பீடு (40 சதவிதம்)
உலகில் உள்ள 150 நாடுகளின் வசிக்கும் 30,000-க்கும் மேற்பட்ட சிறந்த
கல்வியாளர்களிடம் சர்வே எடுக்கப்படுகிறது. மின்னஞ்சல் மூலமாகவும்,
நேரிலும் கேள்வித் தாள்கள் அளிக்கப்பட்டு பதில்கள் பெறப்படுகின்றன.
இதற்கு 40 விழுக்காடு மதிப்பெண்
வழங்கப்படுகிறது.
2. ஆசிரிய - மாணவர்
விகிதாச்சாரம் (20%)
கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர்கள், மற்றும்
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த விகிதாச்சாரம் கணக்கிடப்படுகிறது.
3. ஆராய்ச்சிக் கட்டுரைகளின் பயன்பாட்டு எண்
(20%)
கல்வி நிறுவனத்தில் பணியாற்றும்
பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் வெளியிடும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை பிறர்
எவ்வளவு தூரம் பயன்படுத்தியுள்ளார் என்பதைக் குறிக்கும் எண்.
4. வேலை வழங்கும் நிறுவனங்களின் நிலைப்பாடு
(10%)
படித்து முடித்துவிட்டு வெளியில்
வரும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்களிடம் நடத்தப் படும்
கருத்துக் கணிப்பு.
5. உலகளாவிய செயல்பாடு (10%):
இது இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு
ஒவ்வொன்றிற்கும் 5% ஆக வழங்கப்படுகிறது. வெளிநாட்டு
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பற்றிய கணிப்பு இது. இந்தக்
கணிப்பானது குறிப்பிட்ட நிறுவனம் உலக அளவில் புகழ்பெற்றுள்ளதா என அறிய உதவும்.
பல்வேறு நிறுவனங்களைப் பற்றி பல்வேறு
ஊடகங்கள் வழியாகப் பெறப்பட்ட தகவல்கள் வகைப்படுத்தப்பட்டு தர வரிசைக்கு
உட்படுத்தப் படுகிறது.
2013 ஆம்
ஆண்டு நடந்த தரவரிசைப் பட்டியல் பணியில் 30,000 பல்கலைக்கழகத்திலிருந்து 90,000
கணிப்புகள் பயன்படுத்தப்பட்டன. இதில் மாசாசூட்ஸ் இன்ஸ்டிடுயூட் ஆப் டெக்னாலஜி(MIT), ஹார்வடு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் முதல் மூன்று இடங்களைப்
பிடித்துள்ளன. இதில் கனடாவின் 3 பல்கலைக் கழகங்கள் முதல் 50 இடங்களில்
இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தில் 6 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில் 12 ஆசியப் பல்கலைக்கழகங்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்தப்
பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்தியாவில் எந்தக் கல்வி நிறுவனமும் இடம் பெறவில்லை
என்பது வேதனையான தகவல். இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் 144, இங்கிலாந்தின் 69,
ஜெர்மனியின் 42, பிரான்சின் 40 மற்றும் ஜப்பானின் 38 நிறுவனங்கள் பட்டியலில் இடம்
பெற்றுள்ளன.
இந்தப்
பட்டியலில் ஐஐடி(IIT) டெல்லி 222-வது இடத்திலும், ஐஐடி பாம்பே 233-வது இடத்திலும், ஐஐடி
கான்பூர் 295-வது இடத்திலும், ஐஐடி மெட்ராஸ் 313-வது இடத்திலும், ஐஐடி காரக்பூர்
346-வது இடத்தையும் பிடித்துள்ளன. MIT போல் வரவேண்டும்
என ஆரம்பிக்கப்பட்ட IIT காரக்பூருக்குமான இடைவெளி 345. என்னே நம் தரம்?
ஆசிய அளவில் உள்ள தரப்பட்டிலில் ஐஐடி
மும்பை 39-வது இடத்திலும், ஐஐடி டெல்லி 38-வது இடத்திலும், ஐஐடி மெட்ராஸ் 49-வது
இடத்திலும் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் 78-வது இடத்திலும் உள்ளன. கடந்த வருடத்தை
விட 2 முதல் 5 இடங்கள் பின்தங்கி உள்ளன. முதல் இடத்தை ஹாங்காங் பல்கலைக்கழகம்
பிடித்துள்ளது. பாகிஸ்தானின் காயிதே-ஈ-இஸ்லாம் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய
அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இஸ்லாமாபாத் ஆகிய இரண்டும் மும்பை
பல்கலைக்கழகத்தை விட 20 இடங்கள் முன்னே உள்ளன.
சர்வதேச
அள்வில் இந்தியக் கல்வி நிறுவனங்கள் போட்டி போட வேண்டுமென்றால் அதற்கு இன்னும்
நிறைய முயற்சிகள் செய்து உழைக்க வேண்டும்.
சர்வதேச
தர நிர்ணயம் என்பது ஒரு வியாபார உத்தி என்றும், தரவரிசைக்குப் பயன்படுத்தும் முறை
சரியான அளவுகோல் அல்ல என்றும் வாதிடுவோரும் உள்ளனர். மேலும் இந்த முறையானது கற்பித்தலைவிட
ஆராய்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது என்றும் ஒரு வாதம் உண்டு. மேலும் Q.S ரேங்கிங்கானது மாணவர்களை முன்னிலைப் படுத்தியே எடுக்கப் படுகிறது
என்றும் கூறுகிறார்கள்.
இந்த
முறையில் உலகில் உள்ள கல்வி நிறுவனங்களில் சிறு எண்ணிக்கையில் மட்டுமே கணக்கிடப்படுகிறது.
இது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு பாதிப்பு உண்டாக்குகிறது
என்றும் விமர்சிக்கப்படுகிறது.
இந்தியக்
கல்வி நிறுவனங்கள் இடம்பெறாமைக்கு நம்மவர் கூறும் கருத்துக்கள் வியப்பை அளிக்கும்
வண்ணம் உள்ளது.
வெளிநாட்டு
மாணவர்களைச் சேர்ப்பதில் அரசின் கட்டுப்பாடுகள் அதிகம், மேற்கத்திய நாடுகளைப் போல்
இந்தியாவில் பொறியியல் படிப்புடன் கலைப் படிப்புகளைச் சொல்லித் தருவதில்லை,
தரப்பட்டியல் விஞ்ஞான முறையில் தயாரிக்கப்படுவதில்லை, வெளிநாட்டுப் பேராசிரியர்களை
வேலைக்கு அமர்த்த முடியவில்லை, இவையே அவர்களின் கருத்துக்கள். ஆனால் இவை
தோல்வியிலிருந்து தப்பிக்கும் விதமாகவே கருதப்படுகிறது. நம்முடைய நோக்கம்/ இலக்கு
தெளிவானது. ஆனால் அதை அடைய பாதை தெளிவாக இல்லை.
நம்
உயர்கல்வி நிலையங்களில் நல்ல விஷயத்திற்குத்தான் பற்றாக்குறை. ஆனால் தீமைக்கோ
எல்லையே இல்லை.
அவற்றில்
சில உதாரணங்கள்:
1995
முதல் 2000-மாவது ஆண்டுவரை சென்னை ஐஐடி-யில் செய்யப்பட்ட அத்தனை நியமனங்களையும்
சி.பி.ஐ விசாரனைக்கு உட்படுத்தியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
மும்பை
ஐஐடி-யில் கடந்த வருடம் இடம் பிடித்தவர்களில் 769 பேர் சேரவில்லை. உயரிய கல்வி
நிறுவனமான ஐஐடி-களில் 43% பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளது. அதாவது
மொத்த ஐஐடி-களில் 2608 பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன. 20 தேசிய தொழில்நுட்ப
நிறுவன்ங்களில் 48% பேராசிரியர் பணியிடங்கள் அதாவது 3034 இடங்கள் காலியாக உள்ளன.
நடப்பு
நிதியாண்டில் ஐஐடி-களுக்கு ரூ.3670 கோடியும் தேசிய தொழில்நுட்ப நிறுவன்ங்களுக்கு
ரூ.1719 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த
நிலையில் நம் உயர் கல்வி நிலையங்கள் எவ்வாறு உலகத் தரப்பட்டியலில் இடம்பெற
முடியும்.
இந்தியா
உயர் கல்வியில் உலக அளவில் போட்டியிட வேண்டும் என்றால் அது கடக்க வேண்டிய தொலைவு
மிக அதிகம். தேசிய அறிவுசார் குழுவின் பரிந்துரைகளை உடனே ஏற்று செயல்பட வேண்டும்.
தேசிய அறிவுசார் குழுமத்தின் மூன்று பரிந்துரைகளான விரிவாக்கம், உள்ளடக்குதல்
மற்றும் வித்தகம்(EXPANSION, INCLUSION and EXCELLENCE) ஆகியவற்றை நடைமுறைக்குக் கொண்டு
வரவேண்டும். மேலும் உயர்கல்வியில் சேர்வோர் எண்ணிக்கையை 30% மேலாக உயர்த்தல்,
கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து
பணியாற்றுதல், 2015 ஆம் ஆண்டுக்குள் 1500 பல்கலைக்கழகங்கள் நிறுவுதல், தற்போது
உள்ள நிறுவனங்களை மறுசீரமைத்தல், ஒழுங்குமுறை ஆணையம் அமைத்தல் போன்றவை முக்கியமாக
மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள்.
மேலும்
கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு பாடத்திட்டத்தினை குறிப்பிட்ட இடைவெளியில்
மாற்றுதல், கிரெடிட் சார்ந்த மதிப்பீடு திட்டம், அக மதிப்பீடு, ஆராய்ச்சி
மேம்பாடு, நிர்வாகத்திறன் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
பல்வேறு
குழுக்கள் அமைப்பதும், அது தனது அறிக்கையினை அரசுக்கு அளிப்பதும், அது பற்றி ஓரிரு
நாள் விவாதிப்பதும், பிறகு அதைப் பற்றி மறந்து விடுவதுமாக உள்ளோம். மேலும் உயர்
கல்வியைக் கண்காணிக்கும் அமைப்புகளாக 15-க்கும் மேற்பட்ட நிறுவன்ங்கள் உள்ளன.
அரசியல் தலையீடு, குறைந்த நிதி ஒதுக்கீடு, நேர்மையின்மை மற்றும் திறமையற்ற தலைமை
அமைப்புகளால் சிதைந்து வருகிறது.
இதனைச்
சரிபடுத்தி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப பயிற்றிப் பல கல்வி தந்தே இந்தப் பாரை
உயர்த்திட வேண்டும்.
No comments:
Post a Comment