கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் பிறந்த நாள்
29.11.2013
நன்றி http://tamil.culturalindia.net/kalaivanar-n-s-krishnan.html
தமிழ் திரைப்படத்துறையில் ‘கலைவாணர்’ என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே என். எஸ். கலைவாணரின் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும்.
அவர், 1908 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “நாகர்கோவிலுக்கு” அருகில் ஒழுங்கினசேரி என்ற இடத்தில், ‘சுடலையாண்டி பிள்ளை’, என்பவருக்கும், ‘இசக்கியம்மாலுக்கும்’ மகனாக ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், கல்வி என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே போய்விட்டது. நான்காம் வகுப்புடன் தன்னுடைய பள்ளிப்படிப்பைப் நிறுத்துக்கொண்ட அவர், சிறுவயதிலேயே ஒரு நாடகக்குழுவில் சேர்ந்து சிறிதுகாலம் நடித்து வந்தார். அதன் பிறகு தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஒரு நாடகக்குழுவை தொடங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், பல நாடகங்களை இயக்கியும் நடித்தும் வந்தார்.
சினிமா பயணம்
இவர் நடித்த முதல் படம் ‘சதிலீலாவதி’. இருந்தாலும், திரைக்கு முதலில் வந்த படம் ‘மேனகா’ என்ற திரைப்படம் ஆகும். குறுகிய காலத்திற்குள் சுமார் 150 –க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், நகைச்சுவையில் புதிய மறுமலர்ச்சியையை ஏற்படுத்தி விட்டார். மேலும், இவருடைய மனைவி மதுரம் அவர்கள், ஒரு பிரபலமான நடிகை என்பதால், இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். சிரிக்க வைத்த மாபெரும் சிந்தனையாளர் கலைவாணர்
இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்கியவையாகும். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக சிந்தனை மிகுந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார். அறிவியல் கருத்துக்களையும், தன்னுடைய நகைச்சுவை வாயிலாக வெளிப்படுத்தியவர். பல சீர்த்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். குறிப்பாகச் சொல்லப்போனால் என். எஸ். கிருஷ்ணன் அவரகள், சாதாரண நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, தன்னுடைய சிரிப்பால் அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்தவர். இதானால் தான் இவருக்கு “கலைவாணர்” என்ற பட்டம் 1947 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடராஜா கல்வி கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
தேசபக்தி
பாரதத்தின் தந்தை எனப் போற்றப்படும், மகாத்மா காந்தியின் தீவிர பற்றாளராக விளங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவருடைய நினைவைப் போற்றும் வகையில், அப்பொழுதே ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தினை செலவிட்டு, தன்னுடைய ஊரில் அவருக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.
மறைவு
நகைச்சுவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய என். எஸ் கிருஷ்ணன் அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி, தன்னுடைய நாற்பத்தொன்பதாவது வயதில் காலமானார். தமிழ்நாடு அரசு, அவரது நினைவாக, சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு, ‘கலைவாணர் அரங்கம்’ எனப் பெயர் சூட்டியது.
No comments:
Post a Comment